Thursday, November 07, 2013

தீயா வேல செய்யணும், ஆனந்து! விஷி ஆனந்த் vs கார்ல்ஸன் - செஸ் 2013

செஸ் விஸ்வநாதன் ஆனந்துக்கு ‘உலக நாயகன்’ என்பது கமலுக்கு ரவிக்குமார் வழங்கிய பட்டம் போன்றதன்று.  அவர் அங்கீகரிக்கப்பட்ட செஸ் உலக நாயகன், 5 முறை அப்பட்டத்தை வென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும், 2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

ஆனந்த்-கெல்ஃபாண்ட் 2012 உலக சேம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் அத்தனை சிலாகியமில்லை என்று கூறலாம். ஆனந்த் தனது attacking, aggressive அணுகுமுறையை கைவிட்டு, சற்றே பாதுகாப்பு ஸ்டைலில் விளையாடியதை கார்போவ், கேஸ்பரோவ் உட்பட சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். கேஸ்பரோவ் ஆனந்த் ஒய்வு பெறலாம் என்று கூட கூறினார்.

ஆனந்துக்கு 43 வயது ஆன பின்னும், அவரால் இந்தியாவில் ஒரு செஸ் மறுமலர்ச்சி உண்டான பின்னும், பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உருவாகி இருந்தாலும், அவரது செஸ் திறன், மன வலிமை, சேம்பியன் குணம் (இவற்றில் ஓரளவு) கொண்ட ஒரு செஸ் ஆட்டக்காரர் கூட இந்தியாவில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பது தான் யதார்த்தம். மற்ற விளையாட்டுக்களில், இந்தியாவில், சேம்பியன் தரத்தில் ஒருவருக்கு மேல் இருந்தாலும் (டென்னிஸ்- லியாண்டர், மகேஷ், பாட்மிண்டன் -சாய்னா, சிந்து, கிரிக்கெட்- பலர், தடகளம்- உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ்...), செஸ்-ஐ பொறுத்தவரை,  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, ஆனந்த் ஒருவர் தான் உலகத்தரம் கொண்ட ஒரே சேம்பியன் ஆட்டக்காரர்.

ஆனால், மற்ற நாடுகளில், சிலபல குறிப்பிடத்தக்க ஆட்டக்காரர்கள், உலகத் தரத்தில் உருவாகியிருக்கிறார்கள் - லெவான் ஆரோனியன், ஹிகரு நாக்கமுரா, ஃபேபியானோ, செர்கி கராக்கின், மோரோசவிச், மைக்கேல் ஏடம்ஸ், க்ரைசக் அலெக்ஸாண்டர், எடின் பேக்ராட், வேங்க் ஹோ, மமெடயரோவ் போன்றவர்கள்.

சரி, கார்ல்சனுக்கு வருவோம். அவருக்கு 7வது வயதில் தான் செஸ் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மிக குறுகிய காலத்திலேயே, தனது சற்றே தடாலடி ஆட்டத்தாலும், வித்தியாசமான ஓப்பனிங் அணுகுமுறையாலும் பலரையும் தன் பால் ஈர்த்து விட்டது நிஜம். அதே கார்ல்சன் தனது 12-வது ஏதோ ஒரு செஸ் போட்டியில் சரியாக விளையாடாமல், சுய பச்சாதாபத்தில். “இப்படி செஸ் ஆட்டத்தில் துளித் திறமையின்றி நான் ஏன் பிறந்தேன்?!?” என்று தன்னையே நொந்து கொண்டுள்ளார் :-)

8 வருடங்களுக்குப் பின், அவர் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரர் (ரேட்டிங் புள்ளிகள் 2872, செஸ் வரலாற்றில் கேஸ்பரோவ் உட்பட யாரும் தொடாத சிகரம் இது) ஆனது மட்டுமன்றி, ஒரு மெகா ஸ்டாராக, விளம்பரங்கள், தோற்றங்கள் வாயிலாக 2013-ல் 3.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார்.  கேஸ்பரோவைப் போலவே, ஆனால் தனது 22-வது வயதிலேயே, டைம் பத்திரிகையின், உலகில் மிக்க செல்வாக்கு கொண்ட டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கார்ல்சன்.

கார்ல்சன் மார்ச் 2013-ல் நடந்த, உலகின் டாப் 8 ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட மிகக் கடினமான Candiates tournament-ல் முதலிடம் பெற்று, ஆனந்துக்கு போட்டியாளராக (challenger) அறிவிக்கப்பட்டார்.  யார் ஆனந்துக்கு போட்டியாளராக வருவார் என்பதை கடைசி சுற்று வரை சொல்ல முடியாத அளவுக்கு, த்ரில்லிங்காகவும், பல அருமையான ஆட்டங்கள் கொண்டதாகவும் இந்த Candiates tournament இருந்தது.  இறுதி 3 சுற்றுகளில் 2 தோல்விகளை கார்ல்சன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் இதை கவனத்தில் கொள்வது மிக அவசியம் :-)

போட்டி முடிவில் அவரும் கிராம்னிக்கும் சம புள்ளிகளில் (8.5/14) இருந்தும், அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற கணக்கில், கார்ல்சன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்!  ஆனந்தே, இதை Best ever Candidates tournament in history என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Candidates tournament ஆட்டங்களை இங்கே ஆடிப்பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chess.pl?tid=80233

இவற்றில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது இவை:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1712941 - Aronian vs Gelfand
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713231 - Svidler vs Carlsen
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713866 - Aronian vs Kramnik
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713636 - Carlsen vs Ivanchuck
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713488 - Gelfand vs Aronian
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714070 - Carlsen vs Svidler
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714073 - Ivanchuck vs Kramnik

கார்ல்சனின் செஸ் வலிமைகள், அவரது பயமின்மை, டிராவுக்கு (draw)  ஆடாமல் கடைசி வரை போராடும் குணம், வித்தியாசமான தொடக்க ஆட்ட அணுகுமுறைகள், தன்னம்பிக்கையும், உடல் திடமும் தரும் மனவலிமை ஆகியவை. சமீபத்தில் நடந்த Sinquefield Cup போட்டி ஆட்டத்தில், கஷ்டமானதொரு பொசிஷனிலிருந்து திறமையாக தப்பித்து, ஆட்டத்தை சமநிலைக்கு எடுத்து வந்து, லெவன் ஏரோனியன் டிரா கேட்டும் தர மறுத்து, மெல்ல மெல்ல தனது பொசிஷனை பலப்படுத்திக் கொண்டு, 70 நகர்த்தல்களுக்குப் பின் கார்ல்சன் ஆட்டத்தை வென்றார். ஒரு மலைப்பாம்பு தனது இரையை சுற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிச் சாகடிக்கும் விதத்துக்கு நிகரானது இது!

”Carlsen is also one of the most talented players from any generation. He will be ridiculously difficult to play against” என்று ஒப்புக் கொள்ளும் ஆனந்த், தான் under dog ஆக குறிப்பிடப்படுவது பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை என்றும், தனது உழைப்பு, ஆற்றல், அனுபவம் இவற்றைக் கொண்டு போட்டியை நல்ல முறையில் எதிர்கொள்வதில் மட்டுமே தனது கவனம் முழுதும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்தின் மேல் தற்போது லேசான கடுப்பில் இருக்கும் கேஸ்பரோவ், கார்ல்சனுக்கு ஆலோசகராக இருப்பது, கார்ல்சனுக்கு பலன் தரும் விஷயமே! கார்ல்சனுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறும் கேஸ்பரோவ், ஆனந்தை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இறுதியாக, ஆனந்த் 2008, 2010-ல் விளையாடியது போல தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி, நடு ஆட்டத்தில் (middle game) நுழையும்போது, சற்றே சாதகமான பொஸிஷனுடன் இருக்க வேண்டியது அவசியம். அது போல, வெள்ளைக் காய்களோடு விளையாடும்போது, aggression, சில சமயங்களில் novelty, அவசியம்.  மெத்தனமாக (passive)  ஆடினால், கார்ல்சன் கை ஓங்கி விடும் அபாயம் உள்ளது.  இந்த செஸ் உலகப்போட்டி, ஃபிஷர் vs ஸ்பாஸ்க்கி, காஸ்பரோவ் vs கார்போவ் உலகப் போட்டிகளுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

நேரம் கிடைக்கும்போது, போட்டியின் interesting ஆட்டங்கள் குறித்து எழுதலாம் என்ற உத்தேசம் இருக்கிறது.  பார்க்கலாம்!

எ.அ.பாலா

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment

said...

good one boss nice review

இலவசக்கொத்தனார் said...

போட்டிகள் நடக்கும் பொழுது எனக்கு அதிகாலை. எழுந்து பார்க்க திட்டமிட்டுள்ளேன். அந்நேரம் நீங்கள் ட்விட்டரில் தொடர்ந்து விளக்கங்கள் தந்தால் நன்றாக இருக்கும்.

விரிவாக ஒவ்வொரு ஆட்டத்தையும் விமர்சித்துப் பதிவுகளும் தாருங்கள். நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள உதவும்.

ஆனந்திற்கு இந்த முறை கடும் சவால்தான். எப்படித் தாக்குப் பிடிக்கிறார் என்று பார்க்கலாம்.

நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails